Where is my friends Home ஈரானிய திரைப்படம்
Where is my friends Home
Where is my friends Home
உலக
சினிமா வரலாற்றில் எப்பொழுதுமே ஈரானிய திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி
இடம் உண்டு. ஏனென்றால் அவர்கள் திரைப்படங்களின் வாயிலாகப் பேசும்
அரசியலும், வாழ்வியலும் உலகின் எந்த மூலையில் உள்ள பார்வையாளர்களாலும்
எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய தன்மையில் இருப்பது தான் தனிச்சிறப்பு
வாய்ந்த இடம் அவர்களுக்கு கிடைத்திருப்பதற்குக் காரணம். அதிலும் ஈரானிய
இயக்குநர்கள் திரையில் விரித்துக் காட்டும் குழந்தைகளின் உலகமானது, நம்
குழந்தைப் பருவ அன்பையும், ஏக்கங்களையும், ஏமாற்றங்களையும், காயங்களையும்
நம் மனக்கண்ணிற்குள் ஊற்றெடுக்கச் செய்யும் வித்தை நிறைந்தது. ஈரானிய
குழந்தை திரைப்படங்களில் பெரும்பாலானவை குழந்தைகளுக்கான பாடத்திட்டங்களில்
சேர்க்கப்பட வேண்டிய தகுதியுடையவை. அதே நேரம், அவை குழந்தைகளுக்கு
மட்டுமேயான திரைப்படங்களாக நிற்காமல், வேறொரு கோணத்தில் பார்க்கும் போது,
வயது வந்த பெற்றோர்களுக்கும் ஏதோ செய்திகளை தன்னகத்தே கொண்டிருப்பது
புலப்படும். அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தான், இங்கு நாம்
காணவிருக்கும் “WHERE IS MY FRIEND HOME” திரைப்படமும் .
படத்தின்
கதை இது தான். கல்விச்சாலையின் காட்சியோடு திரைப்படம் தொடங்குகிறது. அங்கு
நோட்டுப் புத்தகத்தில் தன் வீட்டுப்பாடத்தை எழுதாமல் பேப்பரில் எழுதிக்
கொண்டு வந்திருக்கும் மாணவனை ஆசிரியர் கண்டிப்பதோடு, மீண்டும் இது போல்
நடந்தால் பள்ளியை விட்டு வெளியேற்றிவிடுவேன் என எச்சரிக்கிறார். பள்ளி
முடிந்து மாணவர்கள் கலைந்து செல்கின்றனர். கதையின் மைய கதாபாத்திரமான
மாணவன் தன் வீட்டுக்கு வந்து தன் பையை திறக்க அதில், இன்று ஆசிரியரால்
எச்சரிக்கப்பட்ட மாணவனின் நோட்டு புத்தகம் இருக்கிறதை காண்கிறான்.
அம்மாணவனின் வீடு இருப்பது சில கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் ஒரு
சிற்றூரில். பேருந்து வசதியும் கிடையாது. வீட்டிலும் அவனுக்கு சில வீட்டு
வேலைகள் இருக்கின்றன. அதை முடித்துவிட்டு, தனது வீட்டுப் பாடத்தை அவன் எழுத
வேண்டும். இந்த நோட்டுப் புத்தகத்தை நண்பனைத் தேடிச் சென்று ஒப்படைத்து
திரும்பினால், இவனது வேலைகள் எல்லாமே தடைபடும். ஒப்படைக்கவில்லை என்றால்
அவன் பள்ளியிலிருந்து நிறுத்தப்படுவான். இந்தச் சிறுவன் என்ன செய்தான்..?
இதுவே “Where is my friend Home” திரைப்படத்தின் கரு.
இந்தக் கருவை படிக்கும் போதே, படிக்கும் ஒவ்வொருவருக்கும் “அட.. இது என் வாழ்க்கையில் நடந்த சம்பவமாயிற்றே..” என்கின்ற எண்ணம் தோன்றியிருக்கும். இப்படிப்பட்ட எளிமையான நிகழ்வுகளைக் கொண்டு யதார்த்தமான முறையில் உருவாக்கப்படுவது தான் ஈரானிய திரைப்படங்களின் ஒட்டு மொத்த பலம் என்று கூறலாம். திரைப்படத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்தக் கருவை படிக்கும் போதே, படிக்கும் ஒவ்வொருவருக்கும் “அட.. இது என் வாழ்க்கையில் நடந்த சம்பவமாயிற்றே..” என்கின்ற எண்ணம் தோன்றியிருக்கும். இப்படிப்பட்ட எளிமையான நிகழ்வுகளைக் கொண்டு யதார்த்தமான முறையில் உருவாக்கப்படுவது தான் ஈரானிய திரைப்படங்களின் ஒட்டு மொத்த பலம் என்று கூறலாம். திரைப்படத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
படத்தின் முதல் காட்சியில் ஏற்கனவே கூறியதைப் போல் ஒரு பள்ளிக்கூடத்தின் வகுப்பறை காட்டப்படுகிறது. அதில் ஆசிரியர் வராமல் இருப்பதால் மாணவர்கள் தங்களுக்குள் பேசி கதையடித்தபடி இருக்கின்றனர். இதனால் சத்தமும் இரைச்சலுமாக வகுப்பறை இருக்கிறது. ஆசிரியர் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறார். அனைத்து மாணவர்களும் எழுந்து அமர.. ஆசிரியர், “ஏன் கத்திக் கொண்டிருக்கிறீர்கள்.. உங்கள் வீட்டுப் பாடங்களை எடுத்து பெஞ்சின் மீது வையுங்கள் என்று உத்தரவு இடுகிறார்..” அனைத்து மாணவர்களும் சிறிய சலசலப்புடன் தங்கள் வீட்டுப்பாட நோட்டை பெஞ்சில் எடுத்து வைக்கின்றனர். ஒரே ஒரு மாணவன் மட்டும் சற்றே தயக்கத்துடன் பேப்பரில் எழுதப்பட்ட தன் வீட்டுப் பாடத்தை தன் பைக்குள் இருந்து எடுக்கிறான். அதே நேரம் காலதாமதமாக வந்த மாணவன் ஒருவன் கதவைத் தட்டிவிட்டு, ஆசிரியரின் அனுமதிக்காக வாசலில் நிற்கிறான். அவனை திரும்பிப் பார்க்கும் ஆசிரியர் உள்ளே வரும்படி தலையசைக்க, பேப்பரில் வீட்டுப்பாடம் எழுதிய மாணவனுக்கு அடுத்த இடத்தில் அவன் சென்று அமர்கிறான். வீட்டுப் பாடங்களை திருத்திக் கொண்டே வந்த ஆசிரியர் பேப்பரில் எழுதியிருக்கும் மாணவனைப் பார்க்கிறார். அவன் பேப்பரை நீட்ட.. அதை கிழித்து எறிகிறார். அவன் அழுகிறான்.
‘வீட்டுப்பாட
நோட் எங்கே.” என்கிறார். அவன் அழுதபடி “நேற்று என் உறவினரின் வீட்டுக்குச்
சென்றிருந்தேன், வீட்டுக்கு வந்து பார்த்த போது நோட்டைக் காணவில்லை..”
என்று மீண்டும் அழுகிறான். அதே நேரம் வகுப்பறையின் மூலையில் மற்றொரு மாணவன்
எழுகிறான். “அவன் என் வீட்டுக்குத் தான் வந்திருந்தான். அவன் என் மாமா
பையன்.. அவனது நோட்டை என் வீட்டில் விட்டுச் சென்றுவிட்டான்.. இதோ அவனது
நோட்..” என்று அதை நீட்டுகிறான். நோட்டை வாங்கிக் கொண்டு அவன் நின்றபடி
இருக்க.. லேட்டாக வந்து அமர்ந்திருக்கும் மாணவனின் நோட்டை ஆசிரியர்
வாங்குகிறார். அம்மாணவன் வீட்டுப் பாடத்தை ஒழுங்காக எழுதியிருக்க அதை
திருத்திக் கொண்டே அவனை பாராட்டும் ஆசிரியர், நின்று கொண்டிருக்கும்
மாணவனிடம் அந்நோட்டை புரட்டிக் காட்டியபடி “இப்படி தேதி வாரியாக நீங்கள்
எழுதுவது உங்களுக்குத்தான் உதவும்.. மீண்டும் ஒரு முறை இது போல்
நேர்ந்தால், பள்ளியை விட்டு அனுப்பு விடுவேன்..” என்று எச்சரிக்கிறார்.
மாணவன் தலையாட்டியபடி அமர்ந்து கொள்கிறான். சிறிது நேரம் கழித்து ஸ்கூல்
மணி அடிக்க.. பள்ளி மாணவர்கள் வெளியேறுகிறார்கள். அனைவரும் பள்ளியை விட்டு
வெளியேறும் அவசரத்துடன் ஓடுகிறார்கள். ஆசிரியரால் எச்சரிக்கப்பட்ட மாணவன்
தடுமாறி கீழே விழுகிறான். அவனது புத்தகங்கள் சிதற.. லேட்டாக பள்ளிக்கு வந்த
மாணவன் அவனுக்கு உதவுகிறான். அவன் கால்சட்டையில் படிந்திருக்கும் அழுக்கை
பக்கத்தில் இருக்கும் தண்ணீர் குழாயில் வைத்து கழுவி விடுகிறான். இருவரும்
வீட்டுக்கு கிளம்புகிறார்கள்.
படத்தின்
மையக் கதாபாத்திரமான மாணவன் வீட்டுக்கு வருகிறான். அவனது தாய் அழுது
கொண்டிருக்கும் கைக்குழந்தைக்கு புட்டிப் பால் கொடுக்கிறாள். பள்ளி விட்டு
வீடு திரும்பியிருக்கும் தன் மகனை மேல்மாடிக்கு சென்று வெந்நீர் பெற்று
வரும்படி கூறுகிறாள். தன் பையை வீட்டுக்குள் வைத்துவிட்டு மேல்மாடிக்கு
செல்கிறான். அங்கு ஒரு வயதான பாட்டி இருக்கிறாள். அவளிடம் வெந்நீர்
பெற்றுக் கொண்டு திரும்பும் போது, அந்த மூதாட்டி சிறுவன் சூ அணிந்த காலோடு
வீட்டுக்குள் வந்திருப்பதை பார்த்து சத்தம் போடுகிறாள். சிறுவன் வேகமாக
வெளியேறுகிறான். மாடியிலிருந்து கீழே இறங்கி வரும் பொழுது அந்த
மூதாட்டியின் பேரன் விளையாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான். அவன் இந்தச்
சிறுவனை விளையாட அழைக்க, தனக்கு வீட்டுப்பாடம் இருக்கிறது என்று காரணம்
சொல்லி அவன் மறுக்கிறான்.. ‘வீட்டுப் பாடம் பிறகு எழுதலாமே..” என்கிறான்
மூதாட்டியின் பேரன்.. வீட்டுக்குள் இருந்து முக்கியச் சிறுவனின் அம்மா
அழுக்குத் துணிகளை கைகளில் ஏந்தியபடி வெளி வருகிறாள். அவளைப் பார்த்தபடி
சிறுவன் வீட்டுக்குள் செல்ல.. அம்மா துவைக்கத் தொடங்க.. பாட்டியின் பேரன்
விளையாடச் செல்ல ஆயத்தமாகிறான். தொட்டிலில் கிடத்தப்பட்ட குழந்தை அழத்
தொடங்குகிறது. அம்மா தொட்டிலை ஆட்டி விடும்படி கூறுகிறாள். சிறுவன்
தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக்க.. மூதாட்டியின் பேரன் சைகை மூலமாக
அழைக்கிறான்.
அம்மா
துவைத்தபடியே “வீட்டுப்பாடம் இருந்தால் முதலில் எழுதி முடித்து விடு..”
என்று சொல்கிறாள். அவன் வீட்டுப்பாடம் எழுத தனது பையை திறக்கிறான். ஒரே
மாதிரியான அட்டைப் படம் போட்ட இரண்டு நோட்டுகள் இருக்கின்றன. அவன்
குழம்புகிறான். இரண்டையும் உள்ளே திறந்து பார்த்து திகைக்கிறான்.
அம்மாவிடம் சொல்ல எத்தனிக்கையில் மீண்டும் குழந்தை அழுகிறது.. “காதில்
விழவில்லையா.. தொட்டிலை ஆட்டு..” என அம்மா கத்த.. சிறுவன் மீண்டும்
தொட்டிலை ஆட்டுகிறான். வீட்டு வாசல் அருகே நின்று கொண்டிருக்கும்
மூதாட்டியின் பேரன் மீண்டும் சைகையில் விளையாட அழைக்க.. அதை அம்மா
கவனிக்கிறாள்.. “அவன் விளையாட வரமாட்டான்.. நீ போய் விளையாடு.. அவனுக்கு
வேலை இருக்கிறது..” என்று துரத்துகிறாள். மூதாட்டியின் பேரன்
வெளியேறுகிறான்.
சிறுவன் மீண்டும் வீட்டுப்பாடம் எழுத அமர்கிறான். இரண்டு நோட்டுகளையும் கைகளில் வைத்தபடி, “அம்மா” என்று அழைக்கிறான்.. அவள் “நீ விளையாடப் போக வேண்டாம்..” என்கிறாள். இவன் “நான் விளையாடப் போகலை.. என் ப்ரெண்டுகிட்ட நோட்டு குடுத்துட்டு வந்திருவேன்..” என்கிறான்.. அவள் காதிலே வாங்காதவள் போல் துவைத்துக் கொண்டே இருக்கிறாள்.
சிறுவன் மீண்டும் வீட்டுப்பாடம் எழுத அமர்கிறான். இரண்டு நோட்டுகளையும் கைகளில் வைத்தபடி, “அம்மா” என்று அழைக்கிறான்.. அவள் “நீ விளையாடப் போக வேண்டாம்..” என்கிறாள். இவன் “நான் விளையாடப் போகலை.. என் ப்ரெண்டுகிட்ட நோட்டு குடுத்துட்டு வந்திருவேன்..” என்கிறான்.. அவள் காதிலே வாங்காதவள் போல் துவைத்துக் கொண்டே இருக்கிறாள்.
அவன்
மீண்டும் “அவனது வீட்டுப் பாட நோட் என்னிடம் இருக்கிறது.. அதை நான்
கொடுக்க வேண்டும்..” என்கிறான். அவள் “உன் வீட்டுப் பாடத்தை முதலில்
எழுது..” என்கிறாள்.. அவன் தாய்க்கு புரிய வைப்பதற்காக இரண்டு நோட்டை
கையில் பிடித்தபடி அவளை நெருங்கிச் செல்கிறான். “பாருங்கள்.. இரண்டுமே ஒரே
மாதிரி இருக்கிறது அல்லவா.. தெரியாமல் அவனது நோட்டை நான் எடுத்துவந்து
விட்டேன்.. இதைப் போய் கொடுத்துவிட்டு வருகிறேன்..” என்கிறான். அவன் தாய்
அழுக்குத் துணியைத் தூக்கி அவன் மீது எறிந்து அடிக்க முனைகிறாள். அவன்
பயந்து போய் வீட்டுப்பாடம் எழுத அமர்கிறான். அவனது தாய், “நீ விளையாடப் போக
வேண்டாம். முதலில் வீட்டுப் பாடம் எழுது..” என்று கத்துகிறாள். இவன்
மீண்டும் “நான் விளையாடப் போகவில்லை.. என் நண்பனிடம் நோட்டை ஒப்படைக்க
வேண்டும். இல்லையென்றால் ஆசிரியர் அவனை பள்ளியை விட்டு அனுப்பிவிடுவார்..”
என்கிறான். ”அவன் செய்த தவறுக்கு அந்த தண்டனை சரிதான்” என்கிறாள் அவனது
தாய். சிறுவன் “நான் தான் அதை மாற்றி எடுத்து வந்தவன்.. தவறு என்னுடையதும்
தான்..” என்கிறான். தாய் மீண்டும் “வீட்டுப் பாடம் எழுதப் போகிறாயா…?
இல்லையா..?” என்று கத்துகிறாள். அவன் அமைதியாகிறான்.
மாடியிலிருந்து
இறங்கும் பாட்டி, தன் காலில் சூ அணிந்து வெளியே செல்ல ஆயத்தமாகிறாள்.
சிறுவனைப் பார்த்து, “இங்கே நீ சூவை கழட்டி வைத்துவிட்டு, மாடி ஏற
வேண்டும்.. அதுதான் நல்ல பழக்கம்..” என்கிறாள். சிறுவன் வேண்டா வெறுப்பாக
தலையாட்டுகிறான்.. வீட்டுக்குள் சென்ற அம்மா சிறுவனை அழைத்து, ஏதோ வாங்கச்
சொல்லி கடைக்கு அனுப்புகிறாள். சூவை மாட்டிக் கொண்டு கிளம்பும் சிறுவன்
வீட்டையும் தன் நண்பனின் நோட்டுப் புத்தகத்தையும் பார்க்கிறான்.. நண்பனின்
நோட்டு புத்தகத்தை எடுத்து இடுப்பில் மறைத்து சொருகியபடி வேகமாக வீட்டை
விட்டு வெளியேறி ஓடத் தொடங்குகிறான்.. இந்த இடத்தில் படத்தில் முதன்
முறையாக பின்னணி இசை ஒலிக்கத் தொடங்குகிறது. இனி திரைப்படத்தில்
எங்கெல்லாம் அவன் ஓடுகிறானா அங்கு மட்டும் பின்னணி இசை ஒலிக்கும். இறுதியாக
க்ளைமாக்ஸ் காட்சியின் போது ஒலிக்கும். இப்படத்தின் க்ளைமாக்ஸ் என்னவாக
இருக்கும். நண்பனின் வீட்டைத் தேடிச் செல்லும் சிறுவனுக்கு, தன் நண்பனின்
பெயர் அவனது தந்தையின் பெயர், அவனது ஊர் இவைகளைத் தவிர வேறொன்றும்
தெரியாது. முகவரி என்ன..? அவன் வீட்டுக்கு அருகே வசிக்கும் வேறு நண்பர்கள்
யார்..? இப்படி எதுவுமே தெரியாது. அவன் தன் வீட்டில் இருந்து கிளம்பும்
போது மணி மாலை நான்கு.
கால்நடையாகவே
நண்பன் வீட்டைத் தேட வேண்டும். தேடி வீட்டைக் கண்டுபிடித்து நோட்-புக் யை
ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காவிட்டால், நண்பனை பள்ளியை விட்டு
அனுப்பிவிடுவார்கள். குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்குள்
இருட்டிவிடும். அதற்குள் தான் வீடு திரும்ப வேண்டும். அன்னை கடைக்குச்
சென்றிருக்கிறான் மகன் என்று நினைத்துக் கொண்டிருப்பாள். நேரம் செல்ல செல்ல
அவளும் தன் மகனைத் தேடத் தொடங்கியிருப்பாள். வீட்டுக்கு செல்வது நேரம் ஆக
ஆக, அடி கிடைப்பது உறுதியாகிவிடும். அந்த அடியையும் வாங்கிக் கொண்டு
தனக்கான வீட்டுப்பாடத்தையும் அவன் செய்து முடிக்க வேண்டும். ஒரு வேளை
வீட்டை கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம். வீட்டை கண்டுபிடித்தான் என்றால்
எப்படி கண்டுபிடித்தான்..? யார் அவனுக்கு உதவி செய்தார்கள்..? அவனது
வீட்டில் அவனது தாய் அவனை அடித்தாலா..? அவனது வீட்டுப்பாடத்தை முடிப்பதில்
அவனுக்கு ஏதேனும் தடைகள் ஏற்பட்டனவா..? இப்படி பல கேள்விகள்
எழும்புகிறதா..? இதற்கு மேல் இப்படத்தின் கதை குறித்து நாங்கள் எதுவும்
பேசப் போவது இல்லை. ஆனால் இத்தனை கேள்விகளையும் நமக்குள் எழுப்பி, அதற்கு
சிறப்பான முறையில் விடை சொல்கிறது திரைப்படம் என்பதை மட்டும் கூறிக்
கொள்கிறோம்.
இப்படத்தில்
இரண்டுவிதமான பார்வைகள் இருக்கின்றன. குழந்தைகள் பெரியவர்களைப் பார்க்கும்
பார்வை. பெரியவர்கள் குழந்தைகளைப் பார்க்கும் பார்வை. இதில் பெரியவர்களான
நாம் குழந்தைகளைப் பார்க்கும் பார்வை மிக முக்கியமானது. அதனால் அதைப் பற்றி
மட்டும் இக்கட்டுரையில் காண்போம். நாம் குழந்தைகளைப் பெரும்பாலும்
நம்மிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவர்கள் அவர்கள் என்பதான பார்வையில்
மட்டுமே அணுகுகிறோம். இப்படத்திலும் அப்படி குழந்தைகளை அணுகும்
கதாபாத்திரங்கள் உண்டு. முதலாவது மாடியில் வசிக்கும் மூதாட்டி
கதாபாத்திரம், “சூ அணிந்து கொண்டு வீட்டுக்குள் வரக் கூடாது..” என்கின்ற
விசயத்தை அச்சிறுவனுக்கு கற்றுக் கொடுக்கும் நோக்கில் மட்டுமே
இக்கதாபாத்திரம் ஒட்டு மொத்த படத்திலும் செயல்படுகிறது.
அடுத்ததாக சிறுவன் தன் நண்பனின் வீட்டைத் தேடி ஓடும் போது, அவனை தடுத்து நிறுத்தி, தனக்கு சுருட்டு வாங்கி வரும்படி அனுப்பும் சிறுவனின் தாத்தா கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்திடம் மற்றொரு கதாபாத்திரம் கேள்வி எழுப்பும் “உன்னிடம் தான் சுருட்டு இருக்கிறதே.. பின்பு ஏன் அவனை வாங்கி வரச் சொல்கிறாய்..?” அதற்கு அந்த தாத்தாவின் பதில் “இருக்கிறது தான்.. ஆனால் நான் சொல்லும் வேலையை செய்வதைக் காட்டிலும் அவனுக்கு என்ன முக்கியமான வேலை இருந்துவிடப் போகிறது. அவன் நான் ஏவும் பணிகளைத் தான் முதலில் செய்ய வேண்டும். நாம் இப்படித் தான் இந்தக் கால குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும் கட்டுப்பட்டு நடப்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்படித்தான் என் அப்பா என்னிடம் நடந்து கொண்டார்..” என்று சித்தாந்தம் பேசிக் கொண்டிருப்பார். அந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்கும் போது நமக்கே அதன் மீது கோபம் வரும். ஆனால் கூடவே நாமும் சமயங்களில் அப்படித்தானே நடந்து கொள்கிறோம் என்கின்ற எண்ணமும் வரும்.
அடுத்ததாக சிறுவன் தன் நண்பனின் வீட்டைத் தேடி ஓடும் போது, அவனை தடுத்து நிறுத்தி, தனக்கு சுருட்டு வாங்கி வரும்படி அனுப்பும் சிறுவனின் தாத்தா கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்திடம் மற்றொரு கதாபாத்திரம் கேள்வி எழுப்பும் “உன்னிடம் தான் சுருட்டு இருக்கிறதே.. பின்பு ஏன் அவனை வாங்கி வரச் சொல்கிறாய்..?” அதற்கு அந்த தாத்தாவின் பதில் “இருக்கிறது தான்.. ஆனால் நான் சொல்லும் வேலையை செய்வதைக் காட்டிலும் அவனுக்கு என்ன முக்கியமான வேலை இருந்துவிடப் போகிறது. அவன் நான் ஏவும் பணிகளைத் தான் முதலில் செய்ய வேண்டும். நாம் இப்படித் தான் இந்தக் கால குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும் கட்டுப்பட்டு நடப்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்படித்தான் என் அப்பா என்னிடம் நடந்து கொண்டார்..” என்று சித்தாந்தம் பேசிக் கொண்டிருப்பார். அந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்கும் போது நமக்கே அதன் மீது கோபம் வரும். ஆனால் கூடவே நாமும் சமயங்களில் அப்படித்தானே நடந்து கொள்கிறோம் என்கின்ற எண்ணமும் வரும்.
மூன்றாவது
கதாபாத்திரம் வயதான காலத்திலும் சிறுவனுக்கு உதவி செய்வதற்காக
தள்ளாடியபடியே அவனோடு நடந்து வரும் ஒரு பெரியவரின் கதாபாத்திரம்.
இக்கதாபாத்திரம் இங்குள்ள எல்லா வீடுகளுக்கும் ஜன்னல் மற்றும்
மரச்சட்டகங்களை அமைத்துக் கொடுத்தவன் நான் தான். அதனால் இங்கு எல்லாரையுமே
எனக்குத் தெரியும் என்று கூறி, சிறுவனை அழைத்துச் சென்று, ஏற்கனவே சிறுவன்
தன் தேடலின் போது தவறாகச் சென்றிருந்த அதே வீட்டுக்கே அழைத்துச் செல்வார்.
அவரிடம் அவன் இது நான் தேடும் வீடில்லை என்று சொல்வதே இல்லை. தன் நண்பனிடம்
நோட்டை கொடுத்துவிட்டதாக சொல்லி விடை பெறுவான். இத்தகைய கதாபாத்திரமாகவும்
நாம் சில நேரங்களில் இருக்கிறோம். நாம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் உணர்ந்த
விடயங்களை குழந்தைகள் அறிய மாட்டார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அது
குறித்து தாங்கள் அறிந்திருப்பதை குழந்தைகள் நம்மிடையே விவாதிக்காமலே
கடந்து செல்கிறார்கள் என்கின்ற படிமத்துடன் அக்காட்சி சிறப்பாக
கையாளப்பட்டிருக்கும்.
பின்பு நான்காவதாக வருவது அச்சிறுவனின் அன்னை கதாபாத்திரம். நாம் குழந்தைகள் நம்மிடையே என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை காது கொடுத்து கேட்பதே இல்லை. அவர்கள் குறித்து நமக்கு முன் தீர்மானங்கள் இருக்கின்றன. அதை மீறி நாம் சிந்திப்பதே இல்லை என்பதை உணர்த்தும் கதாபாத்திரம் அந்த அன்னை கதாபாத்திரம். படத்தின் பாதிக் காட்சி வரையிலுமே அந்தத் தாய் தன் மகன் தன்னை ஏமாற்றிவிட்டு வெளியே சென்று விளையாட நினைக்கிறான் என்றே எண்ணுகிறாள். படத்தின் முடிவிலும் கூட அவள் அப்படித்தான் நினைத்திருக்கலாம் என்கின்ற யூகமே நமக்கு எழுகிறது. இப்படி படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் கோர்வையாக வைத்துப் பார்க்கும் பொழுது, பல சமயங்களில் குழந்தைகள் பெரியவர்களை விட அன்பு நிறைந்தவர்களாக, தண்டிக்க விரும்பாதவர்களாக, புத்திசாலிகளாக, பொறுமைமிக்கவர்களாகவே இருக்கிறார்கள் என்கின்ற எண்ணத்தை இத்திரைப்படம் வலுவாக நமக்குள் விதைக்கிறது. இப்படத்தின் க்ளைமாக்ஸ் என்ன..? என்று உங்களில் பலருக்கு கேள்வி எழலாம். ஆனால் அதை பதிலாக சொல்லாமல், அத்திரைப்படத்தை உங்களையும் காணத் தூண்டி, அதன் மூலம் உங்களுக்கும் அதேவிதமான காட்சி அனுபவத்தைக் கொடுப்பது தான் இத்தொடரை எழுதும் எங்களின் நோக்கம் என்பதால், அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் தவிர்க்கிறோம்.
ஆனால் க்ளைமாக்ஸ் பற்றி
கேள்வி எழுப்புபவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்ள நினைப்பது எல்லாம்
ஒன்றே. ஒரு வணிக மசாலா படத்தில் வழக்கமாக இடம் பெறும் க்ளைமாக்ஸை விட இந்த
க்ளைமாக்ஸ் பரபரப்பானது என்பதும், அதைக் காணும் போது உங்களை அறியாமல்
உங்கள் உதடுகளில் ஒரு மென் புன்னகை பூக்கும் என்பதும், அதையடுத்து நீங்கள்
உங்கள் பள்ளிகால நினைவுகளை குறைந்தது சில மணி நேரமாவது அசை போடுவீர்கள்
என்பதும் மறுக்க முடியாத உண்மை என்பதைத் தான்.
(உண்மையாகவே
நீங்கள் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினால், முழுத்
திரைப்படமும் யூ-டியூபில் காணக் கிடைக்கிறது என்பது உங்களுக்கான உபரி
தகவல்.)
-இன்பராஜா
Keine Kommentare