Breaking News

அரிக்கன் விளக்கு ஆறுமுகம்

காதல் சுகமானது

‘‘படத் தயாரிப்புக்குத் தேவையான பணத்திற்குப் பள்ளி இறுதி வருடங்களில் உருக்குத் தொழிற்சாலையில் இரவில் வெல்டராகவும், கார்கள் நிறுத்துமிடங்களில் சிப்பந்தியாகவும் பணிபுரிந்து பணம் ஈட்டினேன். திரைப்படம் எடுக்க விரும்புவோரிடம் நான் பகிர்ந்து கொள்ளும் முக்கிய அறிவுரை என்னவென்றால், ‘அலுவலக வேலைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உடல் வலுவைப் பொறுத்து எந்த வேலை வேண்டுமானாலும் செய்து பணம் ஈட்டுங்கள்.

செக்ஸ் கிளப்பில் காப்பாளனாகவோ, மனநல விடுதி வார்டனாகவோ வேலை செய்யுங்கள். கால்களைப் பயன்படுத்தி எங்கும் நடந்து செல்லுங்கள். பிற மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். திரைப்படத்துடன் தொடர்பில்லாத வேறு கலை ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள்.

வாழ்வின் அடிமட்ட அனுபவங்கள்தான் திரைப்பட உருவாக்கத்திற்கான அடிப்படைகள்!’’ - வெர்னர் ஹெர்ஸாக், ஜெர்மனி திரைப்பட இயக்குனர்சினிமாவை ஒரு தொழிலாக, வியாபாரமாக அணுகும் வரை அதில் இருக்கும் கலைத் தன்மையை முற்றிலுமாக அனுபவிக்க முடியாது. சினிமா நம்மை ஒரு மாய உலகிற்கு அழைத்துச் செல்கிறது. பூமியில் நாம் காணாத ஏதோ ஒரு ஸ்பரிசத்தை உணரச் செய்கிறது.

காலையில் அலுவலகம் சென்று சேர்ந்து, வேலைகளை முடித்துவிட்டு, மாலையில் வீடு திரும்புவது போல சினிமாவை ஒரு தொழிலாகச் செய்ய முடியாது. இந்த உண்மையை முற்றிலும் உணர்ந்தவர்களால்தான் சினிமா அதன் உச்சபட்ச எல்லையைத் தொட்டிருக்கிறது. தமிழ் சினிமாவை அத்தகைய உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்ல நினைப்பவர்களின் எண்ணமும் மேற்கண்ட வெர்னர் ஹெர்சாக் கூற்றின்படியே இருக்கிறது.

எங்கோ ஒரு கடற்கரை மீனவக் கிராமத்தில் வாழ்ந்துகொண்டு, சினிமாவைக் கற்றுக்கொள்ள கூட வசதி இல்லாமல் இருந்தாலும், சினிமாவை உருவாக்க விரும்பும் ஒருவரின் குறும்படம்தான் ‘அரிக்கன் விளக்கு ஆறுமுகம்’.

தன்னுடைய அரிக்கன் விளக்கு தேவையை அதிகரிக்க, தெரு விளக்குகளை ஆறுமுகம்தான் உடைத்திருப்பார், என்று கருதி அவரை ஊர்க்காரர்கள் வந்து எச்சரித்துவிட்டுச் செல்கிறார்கள். ஆனால் ஆறுமுகத்தின் அரிக்கன் விளக்கிற்கு வேறு சில பின்னணிகள் இருக்கின்றன. ஊருக்கு கரகாட்டம் ஆட வரும் சகுந்தலாவிடம் காதல் கொள்கிறார் ஆறுமுகம். கரகாட்டம் முடிந்து வேறு இடத்திற்குச் செல்லும்போது, தன்னுடைய நினைவாக ஒரு அரிக்கன் விளக்கைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார் சகுந்தலா.

‘‘இந்த அரிக்கன் விளக்கை பத்திரமாக பார்த்துக்கொள், நான் திரும்பவும் வருவேன்’’ என்று சொல்கிறார். காலம் சக்கரம் போல வேகமாக உருண்டோடுகிறது. திருமணம் ஆகி பிள்ளைகள் பெற்ற பின்னரும், ஆறுமுகத்திற்கு சகுந்தலாவின் மீதான காதல் குறையவில்லை. எப்படியும் சகுந்தலாவைப் பார்த்துவிடலாம் என்று அக்கம்பக்க ஊர்களில் நடக்கும் எல்லா கரகாட்டங்களுக்கும் சென்று விடுகிறார். கரகாட்டத்தின் மீதும், சகுந்தலாவின் மீதும் பித்துப் பிடித்துத் திரிகிறார்.

ஒரு கட்டத்தில் உடல் சுகவீனமாகி படுத்த படுக்கையாகிறார். செய்தி கேள்விப்பட்டு சகுந்தலா அவரை பார்க்க நேரில் வருகிறார். சகுந்தலா வின் முகத்தைப் பார்க்காமலேயே ஆறுமுகத்தின் உயிர் பிரிந்துவிடுகிறது. அரிக்கன் விளக்கு மட்டும் சகுந்தலாவைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது.நாற்பது ஆண்டுகளாக எப்படி ஒருவன் தன்னுடைய காதல் மனநிலை மாறாமல் இருக்க முடியும்? திருமணம் ஆகி, குழந்தைகள் பிறந்து, அவர்கள் பதின்ம வயதிற்கு வந்தபிறகும், எப்படி தன்னுடைய பதின்ம வயதுக் காதலிக்காக ஒரு ஆண் காத்திருக்க முடியும்? இதெல்லாம் நிஜத்தில் நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்கிற கேள்வி பார்வையாளர்களின் மனதில் எழலாம்.

 ஆனால் சினிமா ஒருபோதும் நிஜத்தை அப்படியே பதிவு செய்வது கிடையாது. சினிமாவில் வரும் காட்சிகள் அனைத்தும் ஒரு புனையப்பட்ட உலகின் வெளிப்பாடுகள்தான். ஒரு மிகைப்படுத்தப்பட்ட கற்பனைக் கதையை, இருட்டறையில் இருந்தபடி பார்க்கும் பார்வையாளர்களுக்கு இயக்குனர் எப்படிக் கடத்துகிறார் என்பதுதான் முக்கியம். புனைவில் தர்க்கம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதையும் தாண்டி உயர்த்திச் சொல்லுதல், அல்லது காவியமாக உருவாக்குவது என்பது உலகம் முழுக்க இருக்கின்ற ஒரு கலை வடிவம்.

நாம் பார்த்து மறந்து போன, அல்லது நமது பார்வையிலிருந்து மறைந்துகொண்டிருக்கிற அசல் கிராமத்தை இந்தக் குறும்படம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. முக்கியமாக அந்த கிராமத்திற்கே உரிய வட்டார வழக்கையும் அழகாகக் கையாண்டுள்ளார் இயக்குனர்.

வயதான காலத்திலும் கரகாட்டம் என்றவுடன் ஆறுமுகம் அந்த இடத்திற்குக் கிளம்பி விடுகிறார். அந்த வழியே வரும், அவரது வயதையொத்த ஒரு பெண், ‘‘என்ன அண்ணே, கரகாட்டம் பார்க்க கிளம்பிட்டியளா?’’ என்று கேட்டு விட்டு, அவரது பதிலை எதிர்பார்க்காமல், ‘‘மனுஷன் கரகாட்டம்னு சொன்னா கோவில் மாடாட்டம் கிளம்பிடுறாரே’’ என்று பேசிக்கொண்டே நகர்கிறார்.

அசல் வட்டார வழக்கும், கிராமத்து மனிதர்களையும் இதுபோன்ற சில காட்சிகள் திரையில் கொண்டு வந்துவிடுகின்றன. தன்னுடைய கணவன் இந்த வயதிலும் சகுந்தலாவை நினைத்து உருகுகிறாரே என்று விசனப்படும் ஆறுமுகத்தின் மனைவி, அதற்காக அவனிடத்தில் துளியும் கோபித்துக் கொள்வதில்லை. மாறாக ஆறுமுகத்திற்கு அனுசரணையாகவே நடந்துகொள்கிறார். ‘கணவனின் காதல் எத்தனை தூரம் கவித்துவமானது’ என்பதை மனைவியின் இந்த மாதிரியான அனுசரணைதான் பார்வையாளனுக்கு உணர்த்துகிறது.

வயதான காலத்தில் கரகாட்டம் பார்க்க ஆறுமுகம் கிளம்பும் இடத்தில் தொடங்கி, ஆறுமுகம் நொடிந்துபோய் பனங்காட்டில் விழும் வரையிலான காட்சிகளில் ஒளிப்பதிவு பிரதான இடம் வகிக்கிறது. நொடிந்து போன ஆறுமுகத்தின் மனநிலையை உணர்த்த பயன்படுத்தப்பட்டிருக்கும் பனந்தோப்பு, சாலை போன்ற லேண்ட்ஸ்கேப் காட்சிகளும், லோ ஆங்கிள், வெகுதூரக் காட்சி யமைப்பு போன்ற காட்சி உத்திகளும் மிக முக்கியமானவை.

குறிப்பாக இரவு நேரக் காட்சிகளும், கரகாட்டம் நடைபெறும் காட்சிகளும் கதையைக் கடத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. குறும்படத்தில் மூன்று இடங்களில் பாடலும், அதற்கான பின்னணி இசையும் வருகிறது. ஆனால் பாடல் காட்சி வலிந்து திணிக்கப்பட்டதாக இல்லை. அவசியமானதாகவும், கிராமத்தின் வாழ்க்கை முறையே இதுதான் என்பதையும் உணர்த்தும் வகையில்தான் இருக்கிறது.

படம்: அரிக்கன் விளக்கு ஆறுமுகம்
இயக்கம்: சூர்ய பாலா 
நேரம்: 9.53 நிமிடங்கள்
ஒளிப்பதிவு: ரத்திஷ் கன்னா
இசை: ஷிவன்
எடிட்டிங்: விஜய்
பார்க்க:https://www.youtube.com/watch?v=96ZcVpgXFD0


திருமணம் ஆகி, குழந்தைகள் பிறந்து, அவர்கள் பதின்ம வயதிற்கு வந்தபிறகும், எப்படி தன்னுடைய பதின்ம வயதுக் காதலிக்காக ஒரு ஆண் காத்திருக்க முடியும்?
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சூர்ய பாலா, வரலாற்றில் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். படித்து முடித்து விட்டு, தந்தையுடன் மீன் சார்ந்த தொழிலைச் செய்து வந்திருக்கிறார். ஒரு காலகட்டத்தில் தனக்கான இடம் அதுவல்ல என்பதை உணர்ந்துகொண்டு, சினிமா எடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

ஒரு சுடுகாட்டில் அவர் சந்தித்த நபரும், அரிக்கன் விளக்கும்தான் இந்த படத்தின் கதைக்கான மையமாக விளங்கியது என்று சொல்கிறார். குறும்படத்தின் இறுதியில் ஆறுமுகம் கதாபாத்திரம் இறந்ததும் வரும் பாடலைக் கேட்டு, அந்த கிராமத்து மக்கள் ‘உண்மையாகவே யாரோ இறந்துவிட்டார்கள்’ என்று ஓடோடி வந்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு நேர்த்தியாக இசையமைத்து, அந்தப் பாடலை படமாக்கியிருக்கிறார்கள். ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குறும்படங்களுக்கான நிகழ்ச்சியின் இறுதி வரை சென்றிருக்கிறார். கேனான் 5டி கேமராவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறும்படம், பல்வேறு விருதுகளையும், பாராட்டு களையும் சூர்ய பாலாவிற்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது.

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=8089&id1=6&issue=20141229

Keine Kommentare