Breaking News

ஒரு ஊருல

நீரின்றி அமையாது உலகு... ‘நீர் இன்றி அமையாது உலகு’ என்கிறார் வள்ளுவர். ‘காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருநை நதி எனப் பல நதிகள் வளத்தினைப் பெருக்கி திருமேனி செழித்த தமிழ்நாடு’ என்று பாரதியார் குறிப்பிடுகிறார். நாம் வள்ளுவரின் வார்த்தைகளை மறந்து விட்டோம்; பாரதியின் வரலாற்றுப் பதிவை அழித்துவிட்டோம்.
இன்று அண்டை மாநிலங்களிடம் தண்ணீருக்காகக் கையேந்தும் நிராதரவற்ற நிலையில் விடப்பட்டிருக்கிறோம். சென்னையைச் சீராட்டிய மூன்று நதிகளை சாக்கடையாக மாற்றி விட்டு, தண்ணீர் பிரச்னை என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கிறோம். மழை எல்லோருக்கும், எப்போதும் ஒரே அளவில் பெய்துகொண்டுதான் இருக்கிறது. நாம் அதனை வரவேற்பதற்கு பதிலாக, புறவாசல் வழியே வெளியேற்றி விட்டு, முன்வாசல் வழியே தண்ணீருக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
தனிநபருக்கு ஆண்டு ஒன்றுக்குக் குறைந்தபட்சம் தேவையான நீர், சுமார் ஆயிரம் கன மீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒருவருக்குக் கிடைக்கும் நீரின் அளவு 650 கன மீட்டர்தான். ஆனால் சுதந்திரத்திற்கு முன்னரும், சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலகட்டங்களிலும் இந்த அளவிற்கு நீர்ப் பற்றாக்குறை இல்லை. இன்று நிலைமை மாறக் காரணம், நமது பொறுப்பின்மையும், அரசின் பொருளாதாரக் கொள்கையும்தான்.

உலகமயமாக்கலின் அழுத்தத்துக்குப் பணிந்து, நம்முடைய நீர்நிலைகளை அந்நிய நாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்து விட்டு, கேன்களில் அடைக்கப்பட்ட தண்ணீருக்காகவும், குளிர்பானங்களுக்காகவும் அவர்களிடம் கையேந்தி நிற்கிறோம். பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு அரசு நாளொன்றுக்கு வழங்கும் தண்ணீரின் அளவும் பல லட்சம் லிட்டர்களில் உள்ளது. அதற்காக, அரசுக்கு அந்த நிறுவனங்கள் செலுத்தும் தொகை சொற்பமானது. ஆனால் இந்தத் தண்ணீரை கேன்களில் அடைத்து விற்பதன் வாயிலாக அவர்கள் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறார்கள்.

ஆறுகளிலும், குளங்களிலும், சிறிய நீர்நிலைகளிலும் கிடைக்கும் தண்ணீரை  தங்களின் அன்றாடத் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டிருந்த உள்ளூர்வாசிகள், இன்று பெரிய பெரிய நிறுவனங்களிடம் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இயற்கை நமக்கு கொடுத்த நீர் வளத்தை பராமரிக்கவும் நாம் கற்றுக்கொள்ளவில்லை; அரசு மற்றும் அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்கவும் துணியவில்லை.

இந்த நீராதாரச் சுரண்டலுக்கு எதிராக தமிழில் ஒரு குறும்படம் வெளிவந்திருக்கிறது. ‘ஒரு ஊருல’ என்கிற தன்னுடைய குறும்படத்தில், நீராதாரச் சுரண்டலை மிக லாவகமாகப் பதிவு செய்துள்ளார் பொன்ராஜ்... தன்னுடைய பேரன் கிரீஷுக்கு தினசரி கதை சொல்ல வேண்டியது தாத்தாவின் கடமையாக இருக்கிறது.

‘ஒரு ஊர்ல’ என்று ஆரம்பித்து, மிக சாதாரண கதையைச் சொல்வதற்குப் பதிலாக, எளிமையான முறையில், மிக ஆழமான ஒரு அரசியலை உள்நுழைத்து, மிக நேர்த்தியாக தன்னுடைய பேரனுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை முன்வைத்து கதை சொல்லத் தொடங்குகிறார். அந்தக் கதையிலும் தாத்தா, பேரன் என்கிற உறவுமுறை கதைமாந்தர்களே வருகிறார்கள்.

எங்கு பார்த்தாலும் நீர்நிலைகளாகவே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் தாத்தா, தினசரி தன்னுடைய நீளமான தூண்டிலோடு சென்று மீன்பிடித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் அவரது தூண்டிலில் கெளுத்தி, ஜிலேபி, விரால் என எல்லாவகையான மீன்களும் சிக்குகின்றன. கால்வாய், கண்மாய், ஆறு, ஏரி என்று எங்கு சென்றாலும், தாத்தாவுக்கு மீன் வேட்டைதான். காலச்சக்கரம் உருண்டோட, தாத்தாவின் பேரன் தன் கையில் தூண்டிலை எடுக்கிறான்.

தாத்தா காலத்தில் கரை நிறைத்து நின்ற கால்வாய், கண்மாய், குளம் என எல்லா இடங்களிலும் சுற்றித் திரிகிறான். எல்லா நீர்நிலைகளும் தண்ணீர் இல்லாமல் வெடித்துப் போய், வறண்ட பாலையாகக் காட்சி தருகின்றன. எங்கெங்கோ தேடி, இறுதியாக குட்டை போல தேங்கி நிற்கும் ஆற்றின் ஒரு பகுதியில் தன்னுடைய தூண்டிலைப் போட்டு, மீனுக்காகக் காத்திருக்கிறான்.

பல மணி நேரம் ஆகியும், மீன் எதுவும் சிக்கவில்லை. இறுதியாக தூண்டில் அசைந்ததும், உற்சாகத்தோடு அதை இழுக்கிறான். தூண்டிலில் மீன் சிக்கவில்லை. என்ன சிக்கியது என்பது தான், இந்தத் தலைமுறையின் பொறுப்பின்மைக்குக் கொடுக்கப்படும் சாட்டையடி.

‘‘ராஜா ராணி கதை வேண்டாம், நிலாவில் பாட்டி வடை சுட்ட கதை வேண்டாம், வேறொரு கதை சொல்லு தாத்தா’’ என்று பேரன் கேட்டதும், தாத்தா சொல்வதுதான் இந்த மீன்பிடிக்கும் கதை. ஆனால் ஒரு சிறுவனுக்கு காத்திரமான அரசியல் பேசும், நீர் சுரண்டப்படும் கதையைச் சொல்லும்போது, அதனை எத்தனை தூரம் எளிமைப்படுத்த வேண்டும் என்பதற்கு இந்த குறும்படம் ஒரு சான்று. நம்மால் உருவகப்படுத்திப் பார்க்க முடிந்த பல பொருட்களை சிறுவர்களால் உருவகப்படுத்தி பார்க்க முடியாது.

ஆனால் அந்த சொல்லுக்கான உருவத்தை அவர்கள் வேறொரு வகையில் உணர்ந்திருக்கலாம். இந்த குறும்படத்தில், ‘‘தூண்டில்’’ என்று தாத்தா சொல்லும்போது, ‘‘தூண்டில்னா என்ன தாத்தா?’’ என்று சிறுவன் வினவுகிறான்.

இதற்கு ஆயிரம் விளக்கத்தை சொல்ல முடிந்தாலும், நிகழ்காலத்தில் சிறுவர்கள் ரசித்துப் பார்க்கும் ஒரு கார்ட்டூன் கதாபாத்திரமான ‘பாப்பாயி’ கதாபாத்திரம் கையில் வைத்திருக்கும் ஒரு உபகரணம்தான் தூண்டில் என்று விளக்குகிறார் தாத்தா. சிறுவனுக்குக் காட்சி பிடிபட, அடுத்த சம்பவத்திற்கு நகர்கிறார் தாத்தா.

கதையைக் கேட்கும் சிறுவனுக்குக் கூட, ‘நாம் எப்படி நமது நீராதாரங்களை இழந்து, அடையாளத்தை இழந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்’ என்பது புரியவேண்டும். அதற்காகவே, சிறுவர்களுக்குப் பிடித்த ஆறு, குளம், மீன் பிடித்தல், பாப்பாயி கார்ட்டூன் என்று பல நுட்பமான விஷயங்களைக் கையாண்டிருக்கிறார்கள். மாறாக உலகமயமாக்கல், அந்நிய நாட்டு நிறுவனங்கள் என்று கதை சொல்ல ஆரம்பித்தால், அவர்களுக்குச் சோர்வு தான் ஏற்படும்.

அவர்களது விளையாட்டு மற்றும் அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை வைத்தே சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதுதான் இந்தக் குறும்படத்தின் மிகப் பெரிய வெற்றி. எந்த இடத்திலும் பிரசார நெடி இல்லாமல், சிறுமைத்தனங்கள் இல்லாமல், ஆழமான அரசியலைப் பேசிச் செல்கிறது இந்தக் குறும்படம். குறும்படத்தின் ஒரே பிரச்னை, தொடர்ச்சியாக தாத்தா சிறுவனுக்குக் கதைசொல்லும் விதமாக பேசிக்கொண்டே இருக்கிறார்.

இது காட்சி ஊடகம். தொடர்ச்சியாக தாத்தா கதை சொல்லிக்கொண்டிருக்கும் போது, நாம் காதுகளைக் கொடுத்து விட்டு, காட்சிகளைப் பார்க்கும் கண்களை மூடிக்கொள்கிறோம். கதை சொல்லல் என்கிற நல்ல வழிமுறை பின்பற்றப்பட்டிருந்தாலும், கதை சொல்லலாக மட்டுமே காட்சி வடிவங்கள் மாறிப் போய்விடக் கூடாது.

பேரன் தூங்க வேண்டும் என்பதற்காக தாத்தா கதை சொல்கிறார். கதையைக் கேட்டவுடன் நமக்கு தூக்கம் தொலைந்து போகிறது. நமது தூக்கத்தைக் கெடுக்கும் படைப்புகள் எப்போதும் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷமாகவே மாறி விடும்.

படம்: ஒரு ஊருல          இயக்கம்: க.பொன்ராஜ்
நேரம்: 13.34 நிமிடங்கள்    ஒளிப்பதிவு: செல்லையா முத்துசாமி
ஒலி: ராஜசேகர்.கே     படத்தொகுப்பு: பாலாஜி சண்முகம்
பார்க்க: www.youtube.com/watch?v=mgJM8Lxmm_I

பேரன் தன் கையில் தூண்டிலை எடுக்கிறான். தாத்தா
காலத்தில் கரை நிறைத்து நின்ற கால்வாய், கண்மாய்,
குளம் எல்லாம் தண்ணீர் இல்லாமல் வெடித்துப் போய்,
வறண்ட பாலையாகக் காட்சி தருகின்றன.

என்டோசல்பான் பூச்சிக்கொல்லியால், கேரளாவின் காசர்கோடு பகுதியில் நிகழ்ந்த மிக மோசமான விளைவுகளைப் பார்த்துக் கோபமடைந்து, அதனை தன்னுடைய படைப்பில் வெளிப்படுத்த நினைத்திருக்கிறார் பொன்ராஜ். ஆனால் தமிழ்நாட்டின் தலையாய பிரச்னையாக நீராதார சுரண்டலே இருக்கிறது.

எனவே இதை எதிர்த்து, தன்னுடைய படைப்பின் வழியே கலகக்குரலாக வெடித்திருக்கிறார். நல்ல சிந்தனைத் திறன் கொண்ட இளைஞர்களை, அவர்களின் படைப்புகளின் வழியும், அந்த படைப்புகளில் அவர்கள் பயன்படுத்தும் நுட்பமான கூறுகளின் வழியும் நாம் அடையாளம் கண்டுகொள்ளலாம். பொன்ராஜ் அதில் முக்கியமானவர்.

நிறைய சிரமப்பட்டு எடுத்த இந்தக் குறும்படம் அவருக்குப் புகழையும், அதற்கு ஈடாக பணத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. சில படைப்பாளிகளுக்கு லௌகீக வாழ்வின் தேவைகளைத் தாண்டியும் லட்சிய வேட்கை இருக்கும். அந்த லட்சிய வேட்கை அவர்களின் காத்திரத்தை நீர்த்துப் போகாமல் பாதுகாத்து வைக்கும். பொன்ராஜின் இந்தக் குறும்படம், அத்தகைய லட்சிய வேட்கையை படைப்பாளிகளிடமிருந்து கோருகிறது.

Keine Kommentare