TANGERINE


‘’உள்ளம் தொட்ட உலகப்படங்கள்’’ படம்  TANGERINE


‘’உள்ளம் தொட்ட உலகப்படங்கள்’’ படம் #2 TANGERINE
(இத்திரைப்படம் மூன்று ஐ-போன் 5S செல்போன் கேமராக்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்பதும், இதன் மொத்தப் படச்செலவு இந்திய மதிப்பில் 60 இலட்சம் ரூபாயை உள்ளடக்கியது என்பதும், சிறிய அளவில் மட்டுமே ரீலீஷ் செய்யப்பட்ட இப்படத்தின் வசூல் 6கோடி என்பதும் இப்படம் குறித்த மேலதீக தகவல்கள். குறுகிய பட்ஜெட்டில் படம் எடுக்க விரும்பும் இளம் இயக்குநர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்..)

பெரும்பாலும் நாம் கண்டு கொள்ளாத மனிதர்களின் வாழ்க்கையை, அல்லது நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு விடயத்தை நாம் முற்றிலும் யோசிக்கமுடியாத ஒரு கோணத்தில் யோசிக்கத் தூண்டுபவை தான் உலக அளவில் போற்றப்படும் திரைப்படங்களாக மாறுகின்றன. அந்த வகையில் Sean Baker எழுதி இயக்கி இருக்கும் இந்த ஆங்கில மொழித் திரைப்படம் முதல் வகையறா-வைச் சேர்ந்தது. சென்னை மாநகரில் குறிப்பாக நெல்சன் மாணிக்கம் ரோடு, நுங்கம்பாக்கத்தின் வள்ளுவர்கோட்டம் ரோடு, திரிசூலம் ஏர்போர்ட்டின் மறைவான பகுதிகள் என இன்னும் சில பகுதிகளில் நம்மில் பலர் பாலியல் தொழில் செய்யும் மாற்று பாலினத்தவரை பார்த்திருக்கலாம். அவர்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கையைப் பற்றியும் பெரிதாக நமக்கு என்ன தெரியும்..? இரவு நேரங்களில் பாலியல் தொழில் செய்தும், பகல் நேரங்களில் டிராபிக் சிக்னல் மற்றும் கடைவீதிப் பகுதிகளில் காசு பெற்றும் வாழ்க்கையை ஓட்டுபவர்கள். ஒவ்வொருவருமே தங்கள் குடும்பத்தால் ஏதொவோரு கட்டத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் இது மட்டும் தானே நாம் மேலோட்டமாக அறிந்தவை. ஆனால் ஒருவேளை அவர்களை நாம் பின் தொடர்ந்தால் இது தவிர்த்தும் அவர்களது வாழ்க்கையை நாம் அறிந்து கொள்ள முடியும். (அவர்களது வாழ்க்கையை நான் ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்தப் புள்ளியோடு விலகிவிடலாம்.)

அப்படி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பாலியல் தொழிலுக்கு பிரபலமான தெருவில் அலைந்து அறிந்து கொண்ட ஒரு வாழ்க்கையைத் தான் இயக்குநர் Sean Baker நம் முன் Tangerine என்னும் திரைப்படமாக படைத்திருக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஐந்து பேர். ”சிண்டி”, ”அலெக்ஸாண்ட்ரா” என்னும் இரண்டு பாலியல் தொழில் செய்யும் ட்ரான்ஸ் ஜெண்டர் பெண்கள், ”டின்னாக்” என்கின்ற பாலியல் தொழில் செய்யும் பெண், இவர்களைக் கொண்டு பாலியல் தொழிலை நடத்தும் புரோக்கரான ”ஸ்செஸ்டர்” என்னும் ஆண். டிரான்ஸ் ஜெண்டரை மட்டுமே புணர விரும்பும் டாக்ஸி டிரைவரான ”ரேஷ்மிக்”. இந்த ஐவர் தான் முக்கிய கதாபாத்திரங்கள். ஏன் ஒட்டு மொத்த கதாபாத்திரங்கள் என்று கூட சொல்லலாம். கிறிஸ்துமஸ்க்கு முந்தைய நாள். 28 நாட்கள் ஜெயில் தண்டனை அனுபவித்து விட்டு வரும் சிண்டி, தன் தோழி அலெக்ஸாண்ட்ரா மூலமாக தன்னைக் காதலிப்பதாகக் கூறிய புரோக்கர் ஸ்செஸ்டர் தான் சிறையில் இருந்த போது, இன்னொரு பெண்ணுடன் சேர்ந்திருந்து தனக்கு துரோகம் இழைத்ததை அறிந்து கொள்கிறாள். அவனையும் அந்தப் பெண்ணையும் பழிவாங்க புறப்படுகிறாள். அவள் பழி வாங்கினாளா..? இதுவொரு கதை. தோழியாக வரும் அலெக்ஸாண்ட்ரா கிறிஸ்துமஸ் திருநாளை ஒட்டி, ஒரு பாரில் பாட இருக்கிறாள். அதற்கான நோட்டிஸ்களை அவள் சிண்டியுடன் சேர்ந்து போகும் வழிகளில் எதிர்படும் எல்லோரிடம் கொடுத்தபடி செல்கிறாள்.

அவளது பாடல் அரங்கேற்றம் எப்படி நடைபெற்றது..? இது இரண்டாவது கதை. டாக்ஸி ஓட்டுநராக வரும் ”ரேஷ்மிக்” மாற்று பாலினத்தவரை புணர்வதை மட்டுமே விரும்பக் கூடியவன். அப்பெண்கள் எப்போதும் வரிசைகட்டி நிற்கும் தெருவிற்குச் சென்று கடைசியாக சென்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணை அவசர அவசரமாக காரில் ஏற்றிக் கொள்கிறான். ஒவ்வொரு இடமாகச் செல்ல இங்கு வேண்டாம் இங்கு வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள் அப்பெண். அவன் வெறுத்துப் போகிறான். ஒரு இடத்தில் அவள் நிறுத்தச் சொல்ல நிம்மதி அடையும் அவன் அவசர அவசரமாக அவளது பேண்டீசை கழட்டிக் குனிகிறான். குனிந்தவன் பெண்ணுறுப்பு இருப்பதைக் கண்டு வெறுத்துப் போனவனாக தனது காசை அவளிடமிருந்துப் பறித்துக் கொண்டு அவளை வெளியே துரத்துகிறான். அப்பெண் அவனை “Fuciking Homo’ என்று திட்டியபடி நகருகிறாள். இவன் வேறு ஒரு மாற்றுப் பாலினத்தவரை தேடி அலையத் தொடங்குகிறான். அவன் தேடல் நிறைவேறியதா..? என்பது இன்னொரு கதை. இவர்களுக்கு நடுவில் சிண்டியிடம் அவளது காதலனிடம் சேர்ந்து தவறு இழைத்தப் பெண்ணாக மாட்டிக் கொள்ளும் “டின்னாக்” என்னும் பாலியல் தொழில் செய்யும் பெண் கதாபாத்திரம். “டின்னாக்”-யை சிண்டி கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் அடித்து இழுத்துக் கொண்டே வருகிறாள்.. இந்த “டின்னாக்”-கின் நிலை என்ன ஆனது…? இது நான்காவது கதை. இதெற்கெல்லாம் காரணமான ”ஸ்செஸ்டரின்” கதை என்னவானது..? என்பது ஐந்தாவது கதை.

மொத்தமாகப் பார்த்தால் ஐந்துக் கதைகளாகத் தெரிந்தாலும் கூட, ஒட்டு மொத்த படத்தின் காலளவு ஒரு மணி நேரமும் 28 நிமிடங்களும் மட்டுமே. மேற்சொன்ன ஒவ்வொரு கதையைப் படிக்கும் போதும் நமக்கு உள்ளூர ஒரு குரூரமான கிண்டலும் நக்கலும் தோன்றுகிறது இல்லையா..?? மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தப் பெண்ணுக்கு காதலனா..?? ‘ஹா..ஹா..ஹா.. இங்கு ஒரு கிண்டல். இவர்களுக்குப் பாடல் அரங்கேற்றம் செய்யும் ஆசைகள் எல்லாம் இருக்கிறதா..? இங்கு ஒரு நக்கல். இவெனெல்லாம் ஒரு ஆணா..? ச்சீ… போயும் போயும் புணருவதற்கு ஒரு ட்ரான்ஸ் ஜெண்டரை தேடி அலைகிறானா..?? உவ்வே… இங்கு ஒரு குதர்க்கத்துடன் சேர்ந்த நக்கல். இது எல்லாமே நமக்குத் தோன்றத்தானே செய்தது. ஏன் நமக்கு அப்படித் தோன்றுகிறது. இவையெல்லாமே வழக்கமான ஆசைகளைப் போல இல்லாமல் சற்று விசித்திரமாக இருந்ததால் தானே..!!?. ஆம். இந்த விசித்திரமான ஆசைகள் ஏன் தோன்றுகின்றது என்றெல்லாம் இப்படம் ஆராய்வதில்லை.. இப்படிப்பட்ட விசித்திரமான ஆசைகள் அவர்களுக்குத் தோன்றியதால், நாம் படிக்கும் போதே அவர்களைக் கிண்டல் செய்து அசிங்கப்படுத்தியதைப் போல், எப்பெடியெல்லாம் அந்த ஆசைகள் அவர்களை அசிங்கப்படுத்துகின்றன என்பதைத் தான் திரைப்படம் பேசுகிறது. அதை இந்தக் கட்டுரையைப் போல் மிகவும் சீரியஸாகப் பேசாமல் மிகமிக இயல்பான தன்மையுடன் பேசுவது தான் இப்படத்தின் சிறப்பு. மேலும் அது தன்னுடைய கவலைக்காக கண்ணீர் விடும், வருத்தப்படும் மனித இனம் தனக்கு அருகில் இருப்பவரின் துன்பத்தையும் வருத்தத்தையும் ஏன் கேலி செய்து நகைக்கிறது என்கின்ற கேள்வியையும் நம்முன் தூக்கி நிறுத்துகிறது.

அவைகளுக்கெல்லாம் விடைகள் சொல்லி முடித்து வைக்காமல், முடிவைத் தேடி நம்மை ஓட வைத்து இயல்பான காட்சியுடன் முடிந்து போகிறது இப்படம்.
கனமான, கொஞ்சம் முயற்சி செய்தால் நம் நெஞ்சை கசக்கிப் பிழிந்து கண்ணீரைப் பெருக்கெடுக்க வைக்கும் எல்லா சாத்தியங்களையும் இப்படத்தின் காட்சிகள் தன்னகத்தே கொண்டிருந்தாலும், அவைகளை எல்லாம் இயல்பான வலிகளுடன் கடந்து போக வைக்கிறார் இயக்குநர். உதாரணமாக அலெக்ஸாண்ட்ராவை ஒரு வாடிக்கையாளன் ஏமாற்றும் இடம், ’டின்னாவை சிண்டி அடித்து இழுத்து வரும் இடம், ஸ்செஸ்டர் தன் காதலன் என்று சிண்டி சொல்லும் போது அவளை ‘டின்னாக்” கிண்டல் செய்து சிரிப்பதை தாங்க முடியாமல் சிண்டி தலைகுனியும் இடம், அலெக்சாண்ட்ரா பாடும் போது, அதன் வலியை உணர்ந்து சிண்டி கண் கலங்கும் இடம், தர்மசங்கடமான சூழலில் ரேஷ்மிக் மாட்டிக் கொள்ளும் இடம் என பல இடங்களைச் சொல்லலாம். ஒரே நாளில் நடைபெறும் இப்படம் தமிழில் எழுத்தாளர் ஜி.நாகராஜன் எழுதிய ‘நாளை மற்றொரு நாளே” என்னும் நாவலை நினைவுகூர வைத்தது. படத்தின் இறுதிக்காட்சியில் தன் சிகை அலங்காரத்தை இழந்த சிண்டி அலெக்ஸாண்ட்ராவுடன் அமர்ந்திருக்கும் போதும், தன் இருப்பிடத்தை இழந்த ‘டின்னாக்’ விடுதிக்கு வெளியே கொட்டும் பனியில் அமர்ந்திருக்கும் போதும், நம்மை அறியாமல் தன்னெழுச்சியாக நம்மில் ஒரு கேள்வி எழுகிறது. அது அவர்கள் நாளை என்ன செய்யப் போகிறார்கள்..?? என்பதே. ஆனால் அதற்கு நாம் ஜி.நா-வின் தலைப்பைத் தான் பதிலாக சொல்ல வேண்டியிருக்கும். அவர்களுக்கு “நாளை மற்றுமொரு நாளே”. அதே நேரம் மற்றொரு கதாபாத்திரமான ரேஷ்மிக்-கின் நாளை மற்றொரு வழக்கமான நாளையாக இருக்காது என்பதும் நம் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது.

விறுவிறுப்பான காட்சிகளையும் பரபரப்பான திரைக்கதையையும் எதிர்நோக்கும் திரை ஆர்வலர்களுக்கு இப்படம் சற்று மந்தத் தன்மையுடன் நகர்வதைப் போலத் தோன்றும். அது உண்மையும் கூட. அந்த மந்தத்தன்மையை பல இடங்களில் மிகச்சிறப்பான துள்ளலுடன் கூடிய பின்னணி இசை மறக்கடிக்கிறது. அது போல் படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் உங்கள் மனதை கணக்க வைக்கும் என்பதும், எங்கும் அசைய விடாமல் உங்களை ஒரே இடத்திலேயே இருத்தி வைக்கும் என்பதும் உண்மை. மேலும் கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதர்கள் மீதும் ஏதோவொரு விதத்தில் அன்பையும் விதைக்கும் அரிய செயலையும் இப்படம் செய்வதால் ஒரு ஒன்றரை மணி நேரத்தை இப்படத்திற்காக செலவு செய்வதால் குறையொன்றுமில்லை. சொல்லப்போனால் அதனால் இவ்வுலகிற்கு நன்மையே.
-இன்பராஜா





Keine Kommentare